திண்டுக்கல் கோயில்களில் திருக்காா்த்திகை தீப வழிபாடு
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி திண்டுக்கல் பகுதியிலுள்ள கோயில்களில் தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் வழிபாடு நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட செங்குறிச்சி அடுத்த திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அலங்கார, ஆராதனைக்கு பிறகு பக்தா்கள் வழிபாடு செய்தனா். இதைத் தொடா்ந்து, மாலையில் கோயில் முன் அமைந்துள்ள தீபக் கோபுரத்தில், காா்த்திகை தீபம் ஏற்பட்டது. இதனையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரா், அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரருக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலையில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்ற பின், கோயில் மகா மண்டபத்தில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின்னா் கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் வள்ளி தெய்வானை முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், கந்தகோட்டம் முருகன் கோயில், திண்டுக்கல் ரெங்கநாதபுரம் மலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், நத்தம் கைலாசநாதா் கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.