கௌதம் கம்பீரை குறுகிய காலத்தில் மதிப்பிடுவது நியாயமல்ல: முன்னாள் வீரர்
``திமுக போல விருந்து போட்டு சாப்பிட்டு விட்டுபோகும் கூட்டம் அல்ல" - எடப்பாடி பழனிசாமி காட்டம்
சேலம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
``தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது; சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி வாடகைக் கட்டணத்தில் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு மத்திய அரசைத் தொடர்புகொண்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.திமுகவிடம்தான் ஆட்சி அதிகாரம் உள்ளது. சொத்து வரியை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், ஏறிய சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். ஏன் தற்போது உயர்த்தியுள்ளார்கள்?
ஆட்சிக்கு வருவதற்கு எந்தப் பொய் வேண்டுமானாலும் சொல்வீர்கள்... ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கைகள் அனைத்தையும் மறந்து விடுவீர்கள்!
அதிமுக அரசு இருக்கும்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்டது. வேளாண் துறை மாநிலப் பட்டியலில் வருகிறது. திமுக 2010 ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மீத்தேன், ஈத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது திமுக.
இந்தத் திட்டங்களை கொண்டு வந்தது திமுக... தடுத்து நிறுத்தி ரத்து செய்தது அதிமுக அரசாங்கம்..
அதிமுக அரசாங்கத்தில் இருக்கும்போது, மத்திய அரசாங்கத்திற்கு அப்போதைய அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதினார்.
வேளாண் துறை மாநிலப் பட்டியலில் வருவதால் நீங்களே சட்டம் இயற்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தைக் கொண்டு வரலாம் என்று அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஐந்து ஆண்டு காலம் விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டங்களும் கொண்டு வர முடியவில்லை... இதை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் ரூ.50 கோடி ,ரூ.100 கோடி கேட்கிறார்கள் என்று பேசியிருந்தது குறித்த கேள்விக்கு,
``திமுக கொடுத்ததை தான் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். திமுக தான் ரூ.10 முதல் ரூ.15 கோடி கணக்கில் கொடுக்கிறார்கள் அப்படி இருக்கும்போது அதிமுகவிடம் எப்படி வருவார்கள். தாங்கள் எப்படி கொடுக்க முடியும் அதன் பொருள்படிதான் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்."
அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தை கலவரக் கூட்டம் என்று பேசும் துணை முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, ``கலவரக் கூட்டம் எங்கு நடந்தது திமுகவில் தான் நடந்தது அதை மறந்து பேசுகிறார். திருச்சியில் திருச்சி சிவா வீட்டை யார் தாக்கியது, திமுககாரர்கள் தான் கண்ணாடியை உடைத்தது, காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது காவல் நிலையத்தில் தாக்கப்பட்டார்கள் இதுதான் கலவரம்..."
அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மோதல் குறித்த கேள்விக்கு,
``அதிமுக ஆரோக்யமான கட்சி, திமுக போன்று அடிமை கட்சி கிடையாது.. சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்சி.அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடம் கிடையாது. அதிமுகவில் யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு இடம் உண்டு அவர்களுக்கு வாய்ப்பு உண்டு அதன் அடிப்படையில் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது தான். திமுக போல விருந்து போட்டு சாப்பிட்டு விட்டு போகும் கூட்டம் போன்று, அதிமுக கூட்டம் அல்ல.
கருத்துக்களை பரிமாறி, நல்ல ஆலோசனை கிடைக்கப் பெற்ற பிறகு கழக நிர்வாகிகள் களஆய்வில் ஈடுபட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதற்கு தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
வந்த உடனே சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் துணை முதலமைச்சர் என்று ஆகிவிட்டார் கிரீடம் கட்டிவிட்டனர். அவராக புரிந்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்" என்றார்.