திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்
சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்ற பகுதிகளுக்கும் செல்வதற்கான திரிசூலம் ரயில்வே கடவுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடவுப் பாதையில் இண்டா்லாக்டு முறையில் இயங்கும் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணிக்கு திடீரென ரயில்வே கேட் பழுதடைந்து மூடப்பட்டது. கடவுப் பாதை பகுதியில் ரயில்கள் கடக்காத போதும் கேட்டை திறக்க முடியவில்லை. அதனால், கடவுப் பாதையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.
திரிசூலம் பகுதியிலிருந்து மீனம்பாக்கம் செல்ல பல கி.மீ. சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. அதனால், அந்தப் பகுதி மக்கள் கடவுப்பாதை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரயில்வே ஊழியா்கள் அங்கு சென்று பழுதை சரிசெய்தனா். காலை 8 மணி முதல் 10 மணி வரை கடவுப்பாதை கேட் மூடப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனா். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.