SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்...
திருக்கோழம்பியம்: `கால்நடைகளின் பிணி தீர்க்கும் அறுகம்புல்' - பசுவாக அம்பிகை தவம் இருந்த தலம்
அம்பிகை மண்ணுலகுக்கு வந்து ஈசனை நினைத்துத் தவம் இருந்த தலங்கள் அநேகம் உண்டு. அவற்றுள்ளும் அம்பிகை பசுவாக வந்து ஈசனை வழிபட்ட தலங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அப்படி ஒரு தலம்தான் திருக்கோழம்பியம்.
மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் ஆடுதுறையில் இருந்து தெற்கே சுமார் 8 கி.மீ.தொலைவில் உள்ளது திருக்கோழம்பியம். இங்குதான் அருள்மிகு கோகணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

உலகில் சிவபூஜையின் மகிமையை எடுத்துச்சொல்லவும், பசுக்களின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும் ஈசன் அம்பிகையை மண்ணுலகில் சென்று தவம் செய்யப் பணித்தார். ஈசனின் திருவுள்ளத்தை ஏற்றுக்கொண்ட அம்பிகை அவ்வண்ணமே திருக்கோழம்பியம் தலத்துக்குப் பசுவாக வந்து தவத்தை மேற்கொண்டார். இத்தலத்தில் பிரம்மதீர்த்தம் என்னும் மகிமை பொறுந்திய தீர்த்தம் ஒன்று உண்டு. அந்தத் தீர்த்தத்தில் அனுதினமும் நீராடி ஈசனுக்குப் பூஜை செய்து தவம் செய்தாள் அம்பிகை. அங்கிருந்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு வந்தாள் அன்னை. அம்பிகையில் பூஜையில் மனம் மகிழ்ந்தார் ஈசன். அம்பிகைக்கும் இந்த உலகுக்கும் அருள் செய்யவேண்டிய தருணம் வந்தது.
ஒருமுறை ஈசனை வழிபட அம்பிகை சென்றபோது அறியாமல் பசுவின் குளம்பு ஒன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அன்னையின் ஸ்பரிசத்தால் நெகிழ்ந்த ஈசன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகைக்கு அருள் செய்தார். அன்னையும் ஈசனை வணங்கித் துதிக்க அன்னையைத் தன்னோடு சேர்த்துக்கொண்டார் ஈசன். இன்றும் இத்தல லிங்கத்தின் பசுவின் குளம்படி பதிந்திருப்பதை நாம் தரிசிக்க முடியும்.
இதையொட்டி, இங்குள்ள சிவபெருமான் கொளம்பநாதர் என்றும், ஊர் திருக்கொளம்பியம் என்றும் அழைக்கப்பட்டது. திருக்கொளம்பியம் என்ற பெயரே மருவி, தற்போது திருக்கோழம்பியம் என்று அழைக்கப்படுகிறது.
கொளம்பநாதருக்கு அருள்மிகு கோகர்ணேஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு; அம்பிகைக்கு அருள்மிகு சௌந்தரநாயகி என்பது திருநாமம். இத்தலத்தில் சாபம் காரணமாக குயிலாக மாறித்திரிந்த ஒரு கந்தர்வன் இத்தல ஈசனைப் போற்றி வழிபட விமோசனம் கிடைத்தது என்கிறார்கள். அதன் காரணமாக ஈசனுக்கு கோகிலேஸ்வரர் என்றொரு பெயரும் இந்த ஸ்வாமிக்கு உண்டு.

இந்தத் தலத்திலுள்ள தீர்த்தத்தின் பெயர் பிரம்ம தீர்த்தம். தாழம்பூவைச் சாட்சியாக வைத்து, ஈசனின் திருமுடியை தரிசித்ததாகப் பொய் சொன்ன பிரம்மதேவர், ஈசனின் கோபத்துக்கும் அதன் விளைவான சாபத்துக்கும் ஆளான திருக்கதையை அறிவோம். அவ்வாறு சாபம் பெற்ற பிரம்மன், இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி அதில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற இந்தத் தலத்துக்கு, ராஜராஜ சோழன், செம்பியன் மாதேவி போன்றோர் திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் தலவிருட்சம் மல்லிகை. இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, மல்லிகை மலரைக் கொண்டு ஈசனை அர்ச்சித்து வழிபட்டு, செம்பியன்மாதேவி வெண்குஷ்ட நோய் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு.
இந்தக் கோயிலின் வரலாறு, மாந்தை, தேரழுந்தூர், திருவாவடுதுறை, குத்தாலம், திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, குணதலப்பாடி என 9 கோயில்களுடன் தொடர்புடையது.
இங்கு ஆடிக் கிருத்திகையில் காவடி எடுத்து வழிபடுவது, ரொம்ப விசேஷமானதாகும். திருமண பாக்கியம், குழந்தைப் பேறு முதலாக, வேண்டும் வரங்களை வேண்டியபடி வாரிவழங்கும் அற்புதத் தலம் இது.

பசுக்களின் நோய் நீக்கும் அறுகம்புல் அர்ச்சனை
இத்தல ஈசனுக்கு எதிரில் உள்ள நந்திதேவரின் திருமுன், ஒரு குவளை தண்ணீரும் அறுகம்புல்லும் வைத்து, அர்ச்சனை செய்து மனமுருக வேண்டிக்கொள்ளவேண்டும். பிறகு புல்லையும் தண்ணீரையும் நோய்த் தாக்கியுள்ள பசுவுக்குக் கொடுத்தால், எத்தகைய நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதிகம். எனவே சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்கள், தங்களின் பசுக்களுக்கு நோய் ஏற்பட்டால் தவறாமல் இங்கே வந்து வேண்டிக்கொண்டு பலன் அடைகிறார்கள்.
















