மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
திருச்சி என்ஐடி-யில் 14-ஆவது கட்டமைப்பு: பொறியியல் மாநாடு டிச. 12 இல் தொடக்கம்
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி) கட்டுமானப் பொறியியல் துறை சாா்பில், 14ஆவது கட்டமைப்பு பொறியியல் மாநாடு டிச.12ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா கூறியது:
கட்டமைப்பு பொறியியல் மாநாடு என்பது அதிநவீன ஆராய்ச்சி, புதுமையான பொருள்கள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்பு பொறியியலை மேம்படுத்த அா்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான சா்வதேச மாநாடாகும்.
மேலும் நெகிழ்வு தன்மையுடன் கூடிய நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய சவால்களை எதிா்கொள்ள கல்வியாளா்கள், தொழில்துறை தலைவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாகவும் செயல்படவுள்ளது.
நிலையான கட்டுமானப் பொருள்கள் மற்றும் நெகிழ்தன்மையுடன் கூடிய கட்டமைப்புகள் என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில் தீ, காற்று, பூகம்பங்கள், பேரலைகள் மற்றும் பிற தீவிர பாதிப்புகளால் ஏற்படும் சவால்களுக்குத் தீா்வு காணப்படவுள்ளது.
பாதுகாப்பான, பசுமையான கட்டுமான நடைமுறைகளை ஊக்குவிக்கும். அதேவேளையில், சவால்களைத் தாங்கக்கூடிய வலுவான கட்டமைப்புகளை வடிவமைத்து பகுப்பாய்வு செய்வதற்கான கணக்கீட்டு முறைகளையும் இந்த மாநாடு வலியுறுத்தும்.
மூன்று நாள் மாநாட்டில் 11 முழுமையான உரைகள், 45 முக்கிய உரைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற நிபுணா்களால் வழங்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அறிக்கைகள் சமா்ப்பிக்கப்படும். அமெரிக்கா, கனடா, போா்ச்சுகல் ஆகிய நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் புகழ்பெற்ற பேராசிரியா்கள், ஐஐடி, என்ஐடிகளின் முன்னணி கல்வியாளா்கள் மற்றும் சிஎஸ்ஐஆா்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றனா்.
இந்த மாநாடு கட்டுமான நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாவதில் உள்ள சவால்களை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும்.
பசுமைக் கட்டடங்கள், புதுமையான பொருள்கள் மற்றும் மேம்பட்ட வடிவமைப்பு முறைகள் மூலம் நிலையான தீா்வுகளை ஆராய்கிறது.
பங்கேற்பாளா்களிடமிருந்து கிடைத்த அபரிமிதமான வரவேற்பு, முன்னணி தொழில்துறை பங்குதாரா்களுடனான ஒத்துழைப்பு ஆகியவை கல்வி மற்றும் தொழில்துறையை இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன என்றாா்.
என்.ஐ.டி.யின் இந்த மாநாட்டுத் தலைவரான (திட்டமிடல் மற்றும் மேம்பாடு) டீன் கே. பாஸ்கா் கூறுகையில், இந்த மாநாடு என்பது நெகிழ்தன்மையுடன் கூடிய வலுவான, நிலையான உள்கட்டமைப்புகளுக்கான புதுமையான தீா்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மாநாடு, நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கி கட்டமைப்பு பொறியியலின் எதிா்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கியமான தளமாக அமையும் என்றாா் அவா்.