திருச்சி: விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்பிலான டீ-ஏஜிங் மாத்திரைகள் பறிமுதல்!
சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 3 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 407 பாக்கெட்களில் வைட்டமின் (Anti Ageing) மாத்திரைகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த மாத்திரைகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. வயதானவர்களின் தோல் சுருக்கங்களை போக்கி முதுமையை விரட்டி இளமையாக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் எனத் தெரியவந்தது. ஆனால், உரிய அனுமதியின்றி அதிகளவு வைட்டமின் மாத்திரைகள் எடுத்து வந்ததால், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த வைட்டமின் மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ.1.37 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்த மாத்திரைகளை எடுத்து வந்த சுமதினி துரை, மெஸியா, மோகன ஷ்யாம், தர்ஷினி, சிவானந்த், துரை ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அந்த மாத்திரைகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து, திருச்சி விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம், சிகரெட், வைட்டமின் மாத்திரைகள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாகியுள்ளது.