திருச்சியில் ராக்கெட் லாஞ்சர் பாகம் கண்டுபிடிப்பு..! - போலீஸார் தொடர் விசாரணை
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் சிவன் கோயில் படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர் ஒன்று கிடப்பதாக ஜீயபுரம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அப்படி வந்த அந்த தகவலையடுத்து போலீஸார் விரைந்து அப்பகுதிக்கு சென்று ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றினர். அதனை சோதனை செய்த பொழுது, 'ஒன்றரை அடி உயரம் கொண்ட அது ஒரிஜினல் ராக்கெட் லாஞ்சர் தான். ஆனால், அதில் மருந்து எதுவும் அதில் இல்லை. யார் இதை பயன்படுத்தியது நீரில் வந்து கரை ஓதுங்கியதா' என்பது குறித்து ஜீயபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த ராக்கெட் லாஞ்சரின் பாகத்தை 117 பிரதேச ராணுவ படை அதிகாரிகளிடம் ஒப்படைக்க திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
அதோடு, 'இவ்வகை ராக்கெட் லாஞ்சர்கள் 1950 களில் கொரியாவுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தபட்டவை. அது எப்படி ஜீயபுரம் பகுதிக்கு வந்தது என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்' என்று எஸ்.பி தெரிவித்தார். இந்நிலையில், ராக்கெட் லாஞ்சர் எப்படி மிதந்து இங்கு வந்தது, வேறு யாரும் கரையோரமாக போட்டு சென்றார்களா என்பது குறித்து எஸ்.பி தொடர்ந்து சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.