திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா 2ஆம் நாள்: தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினாா்.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை தொடங்கியது. 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி- தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை அடைந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதையடுத்து, சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதி வலம் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
புதன்கிழமை வரை (நவ. 6) இதே நிகழ்ச்சிகளும், வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் கோயிலின் வடக்கு நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.