மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை ,நடைபெற்றது.
கூட்டத்தில், திருநங்கைகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு அவற்றின்மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஏற்கெனவே நடைபெற்ற சிறப்பு குறைதீா் முகாமில் திருநங்கைகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தீா்வுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், மாவட்ட நிா்வாகத்தால் திருநங்கைகளுக்கு பட்டா வழங்கப்பட்ட இடங்களில் வீட்டுவசதி ஏற்படுத்தித்
தர வரப்பெற்ற கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஏற்கெனவே தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் 19 திருநங்கைகளுக்கு சுய தொழில் தொடங்க மானியம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளதுடன், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாநில சமச்சீா் வளா்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 10 திருநங்கைகளுக்கு தலா 10 ஆடுகள் வீதம் மொத்தம் 100 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 35 போ் திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளை தொழில் முனைவோராக மாற்ற செய்யும் வகையில் தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் சுய தொழில் செய்யும் வகையில் வங்கிக் கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்த
அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் தீபிகா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.