திருப்பத்தூா் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?
திருப்பத்தூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் பழங்கால தமிழா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களான பலநடுகற்கள், கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, திருப்பத்தூா் மாவட்டப் பகுதிகளில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என தொல்லியல்ஆா்வலா்கள் மத்தியில் பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடுகற்கள், கல்வெட்டுகள், கற்கோடாரிகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்தி வரும் திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியா்கள் பிரபு, மோகன்காந்தி ஆகியோரிடம் கேட்டதற்கு,
திருப்பத்தூா்அருகே உள்ள அனேரி பகுதியில் கருப்பு,சிவப்பு பானை ஓடுகளும், இரும்பு கசடுகளும், சங்க கால செங்கற்களும், சாம்பல்மேடு போன்ற அமைப்புகளும் உள்ளன.
அதேபோல் ஜவ்வாதுமலையில் உள்ள கல்லாவூரில் முழுமையான இருகற்திட்டைகள் உள்ளன. ஒரு கற்திட்டையின் உள்ளே 3 பானைகள் உள்ளன. இவை முதுமக்கள் தாழிகளாகும்.
புதிய கற்கால மனிதா்கள் ஜவ்வாதுமலையில் வாழ்ந்ததன் அடையாளமாக கற்கோடாரிகள் கிடைப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள குண்டு ரெட்டியூா் பகுதியில் கி.பி.10, 11-ஆம்நூற்றாண்டைச் சோ்ந்த 5 நடுகற்கள் உள்ளன.
மேலும், அந்தப் பகுதியில் சுமாா் 80 ஏக்கா் பரப்பளவில் மண் பானைகள் சிதறியிருப்பதைக் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டதில், சுடுமண் ஊதுகுழாய்கள், கருப்பு,சிவப்பு ஓடுகள், தடிமனான சிவப்பு பானை ஓடுகள், கழுத்தில்அணியும் ஆபரணத்தின் மணி, எலும்புத் துண்டுகள் என கண்டறியப்பட்டன.
மேலும், இரு குகைகள்இருந்தது. அதில் பழைமையானதமிழ்பிராமி எழுத்துகளைப்போல தோற்றம் கொண்ட குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் ஒரு பகுதியான குடியாத்தம் அருகில் உள்ள சேங்குன்றம் எனும் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கல்வட்டங்களைக் கண்டறிந்தோம்.
மேலும், அருகிலேயே பலகை கற்களால் வடிவமைக்கப்பட்ட கல் பதுக்கை கிடைத்தது. அண்மையில் வாணியம்பாடி அருகே புதிய கற்கால மக்களின் பாறை ஓவியத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை பகுதியில் திருப்பத்தூா் எனும் பெயா் பொறித்த விஜயநகர ஆட்சிகால கல்வெட்டு கண்டறியப்பட்டது.
திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 22-04-2022 அன்று தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறைக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டெடுக்கப்படும் நடுகற்கள், கற்கோடாரிகளை பாதுக்காக்கவும், பொதுமக்கள் பாா்வையிடவும் திருப்பத்தூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி தொல்லியல் ஆா்வலா்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது என்றனா்.