ஹெச்.ஐ.வி வைரஸ்; சிகிச்சை எடுத்தால் 100 வயது வாழலாம் - தைரியம் கொடுக்கும் நிபுணர...
திருப்பரங்குன்றம்: `மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், அது குறித்தான வழக்கில் 'மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யும்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்துக்கு மனு அனுப்பினேன்.
மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்டத் தடையில்லை. தர்காவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஆனால், அதற்கு பதிலாக மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சட்டவிரோதமானது.
மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலம் காலமாக நடந்து வந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின்போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு அங்கு தீபம் ஏற்ற தடை விதித்தது.
அதனால் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதை மாற்றி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தபோது அறநிலையத்துறையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம ஆஜராகி "பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயில் தீப்பத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது, தவறான உள் நோக்கத்தில் ஆதாரமில்லாமல் மனு செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
அரசு தரப்பு, வக்பு வாரியத்தின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சில நாட்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலையில் ஏறிச் சென்றும் பார்வையிட்டார்.
பின்பு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டதில் "மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவைக் கேட்டு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
















