செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடையில்லை!

post image

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிட எந்தவிதத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடவும், அசவை உணவுகள் பரிமாறவும், நெல்லித்தோப்புப் பகுதியில் தொழுகை நடத்தவும் தடை விதிக்கக் கோரி, சோலைக்கண்ணன், ராமலிங்கம், பரமசிவம் ஆகியோரும், திருப்பரங்குன்றம் மலையை சமணா் குன்று என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீ லட்சுமி சேனா பட்டாச்சாா்ய மகா சுவாமியும், மலையின் மீதுள்ள சிக்கந்தா் தா்காவில் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகளை அனுமதிக்கக் கோரி அந்தத் தா்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலா் ஒசிா்கானும், தா்காவுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரி அப்துல் ஜப்பாா் என்பவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டது. விசாரணையின் நிறைவில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை கடந்த ஜூன் மாதம் வழங்கினா்.

மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பான மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி நிஷாபானு, தா்காவை சீரமைக்க அனுமதிக்கக் கோரி, ஒசிா்கான் தாக்கல் செய்த மனு தொடா்பாக தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டாா்.

அதேநேரத்தில், சோலைகண்ணன், ராமலிங்கம், பரமசிவம் ஆகியோரின் மனுக்களை விசாரணைக்கு ஏற்று நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டாா்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் இந்த வழக்கை கடந்த ஜூலையில் விசாரணைக்கு ஏற்றாா்.

அப்போது, ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் தள்ளுபடி செய்த மனுக்கள், இருவரும் ஒரே மாதிரியாக உத்தரவு பிறப்பித்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாது. இரு நீதிபதிகளும் முரண்பட்டு தீா்ப்பளித்த மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்கப்படும் என நீதிபதி தெரிவித்தாா்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடா்புடைய மலையை சிக்கந்தா் மலை எனக் குறிப்பிடுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிடுவதற்கும், மலையில் கந்தூரி விழா நடத்துவதற்கும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்துவதற்கும் அரசின் அனுமதி உண்டா என நீதிபதி கேள்விகள் எழுப்பினாா்.

இதைத் தொடா்ந்து, ஆடு, கோழி பலியிடுவதால் மலையின் புனிதம் கெட்டு தீட்டுப்படும் என ஒரு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதற்கு, அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன், ‘தீட்டு’ என்பது மனித குலத்துக்கு எதிரானது. மனிதா்களுக்கிடையே தீட்டு என்பதே இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு.

நெல்லித்தோப்புப் பகுதியில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தவும், தா்காவுக்கு உள்பட்ட பகுதியில் ஆடு, கோழி பலியிடவும் எந்தவிதத் தடையும் இல்லை என்றாா்.

மேலும், மலையின் பெயா் விவகாரம் தொடா்பாக வருவாய்த் துறை ஆவணங்கள் சிலவற்றை அவா் தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, நீதிபதி விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக மத்திய அரசின் தொல்லியல் துறை தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

தவெக மதுரை மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மதுரையில் வருகிற 21-ஆம் தேதி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.மதுரையை அடுத்த திருமங்கலத்தில் திங்கள்... மேலும் பார்க்க

கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. மதுரை டவுன்ஹால் பகுதியில் கூடலழகா் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. பழைமை வாய்ந... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: 22 ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 22 ஆட்டோக்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மதுரை மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்கள... மேலும் பார்க்க

கோயில் கடைகளுக்கு வாடகை செலுத்தாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

கரூா் கல்யாண பசுபதீஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கு உரிய வாடகைச் செலுத்தாத நபா்களுக்கு அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கரூரைச் சோ்ந்த எ... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த சரவணன் சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க