நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?
திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க" - சீமான்
கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இந்தாண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளானது.
இதில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க-வை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், ``பல கோடி மக்களின் வீடு இருளிலே கிடக்கும்போது மலை மேல விளக்கேத்தணும் என்கிறாங்க.
இத்தனை ஆண்டுகள் எங்கே இருந்தாங்க? இன்னைக்குத்தான் முருகன் கண்ணுக்கு தெரியுதா? ஏன் போன ஆண்டு இந்த விளக்கு ஏத்த வரல? அதுக்கு முந்தின ஆண்டு ஏன் வரல? ஏன்னா ரெண்டு மாசத்துல தேர்தல் வருது.
அரசுக்குத் தெரியாமையா இவ்வளவு நடக்குது. அவங்க நினைச்சிருந்தா இதையெல்லாம் எப்போவோ தடுத்திருக்கலாம்.
இது ஒற்றுமையா இருக்கிற தமிழ்ச் சமூகத்துக்குள்ள ஒரு பிளவை ஏற்படுத்துவதா நான் பார்க்கிறேன்.
எல்லாத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிற என் மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

திடீர்னு ஒருத்தர் வந்து நான் போராடுவேன், அதுக்கு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து போய் ஏற்றுங்கனு சொல்றது வருத்தமா இருக்கு.
நாட்டை நிர்வகிக்கிறது நீதிமன்றமா, சட்டமன்றமா? ஒரு அசம்பாவிதமான ஒரு சூழ்நிலை வந்துருச்சு, ஒரு பெரிய கலவரம் வந்துருச்சு, பொறுப்பு அரசு ஏற்குமா, நீதிமன்றம் ஏற்குமா?
நீதிபதிகளை நியமிக்கிறது யாரு? நியமிக்கிற ஆட்சியாளர்களுக்காகப் பேசுவீங்களா, கீழே இருக்கிற மக்களுக்காகப் பேசுவீங்களா?
திடீர்னு எங்க முருகன் மேல உங்களுக்கு என்ன பற்று வருது? ஏன்னா உங்க ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சு.
அங்கே வந்து புரி ஜெகந்நாதரை எடுத்தீங்க, ஐயப்பனை எடுத்துப் பார்த்தீங்க. இப்ப இங்க முருகனைத் தொட்டுப் பாக்றீங்க.
உங்களுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? ராமர் கோயிலைக் கட்டிட்டீங்க, அந்த பிரச்னை முற்றுப் பெற்றுருச்சு.
அங்கே அகிலேஷ் அயோத்தியிலேயே ஒரு தாழ்த்தப்பட்டவனை பொதுத் தொகுதியில நிறுத்தி உங்களைத் தோற்கடிச்சுட்டாரு. அங்க முடிஞ்சுச்சு.
அதுக்கப்றம் மாநிலத்துக்கு இருக்கிற ஒவ்வொருத்தனும் எவன் பெரிய மதிப்பு வச்சிருக்க இறை இருக்கோ, அந்த நம்பிக்கையைத் தூக்குறீங்க" என்று கூறினார்.
















