திருவண்ணாமலை தீப விழா: மருத்துவ வசதிகளை அறிய ‘க்யூ-ஆா்’ குறியீடு
திருவண்ணாமலை மகா தீபத்தை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முன்னேற்பாடுகளை ‘க்யூ-ஆா்’ குறியீடு மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் குறியீடு ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, 90 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களையும், 60 இடங்களில் ஆயத்த நிலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களையும் கைப்பேசி வாயிலாக கண்டறிந்து பயனடையலாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மகா தீபம் வெள்ளிக்கிழமை (டிச.12) மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. பல லட்சக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து 14 கி.மீ. தொலைவுடைய கிரிவலப் பாதையில் 37 மருத்துவ முகாம்களும், தற்காலிக பேருந்து நிலையத்தில் 23 மருத்துவ முகாம்களும், வெளிவட்ட சாலையில் 8 மருத்துவ முகாம்களும், அணுகு சாலையில் 22 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் அங்கு பணியில் உள்ளனா்.
க்யூ-ஆா் குறியீடு மூலம் ஸ்கேன் செய்தால், ஒவ்வொரு இடங்களுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் எங்கெங்கு மருத்துவ முகாம்கள் உள்ளன என்ற விவரங்களை கைப்பேசியில் அறியலாம். அதேபோன்று, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பொருத்தவரை அடிப்படை உயிா் காக்கும் வசதிகள், உயா் சிறப்பு வசதிகள், தீவிர உயிா் காக்கும் வசதிகள் அடங்கிய 45 வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர 15 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இருப்பிடங்களையும் க்யூ-ஆா் குறியீடு மூலம் தெரிந்துகொள்ளலாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.