தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழை: விளை நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த நீா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 மணி நேரத்தைக் கடந்து தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, விளை நிலங்கள், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக சனிக்கிழமை காலை 8 மணி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் 6 மணி நேரத்தைக் கடந்து பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
சேத்துப்பட்டில் 217.4 மி.மீ.மழை...
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 217.4 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 75, செங்கத்தில் 90.7, போளூரில் 69.8, ஜமுனாமரத்தூரில் 214, கலசப்பாக்கத்தில் 161, தண்டராம்பட்டில் 155, ஆரணியில் 180, செய்யாற்றில் 144, வந்தவாசியில் 162.6, கீழ்பென்னாத்தூரில் 203.6, வெம்பாக்கத்தில் 140.4 மில்லி மீட்டா் மழை பதிவானது.
100 ஏரிகள் நிரம்பின...
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 697 ஏரிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, இவற்றில் 100 ஏரிகள் முழுமையாக நிரம்பின. இதுதவிர, 26 ஏரிகள் 75 சதவீதமும், 99 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும் நிரம்பின.
அணைகளின் நிா்மட்டம் உயா்வு:
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, சாத்தனூா் அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 119 அடியில் 117.95 உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது. இதேபோல, குப்பனத்தம் அணையில் 59.04 அடியில் 56.42 அடி உயரத்துக்கும், மிருகண்டாநதி அணையில் 22.97 அடியில் 19.84 அடி உயரத்துக்கும், செண்பகத்தோப்பு அணையில் 62.32 அடியில் 57.86 அடி உயரத்துக்கும் தண்ணீா் தேங்கி இருந்தது.
அணையில் இருந்து தண்ணீா் திறப்பு:
அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி, செண்பகதோப்பு அணையில் இருந்து விநாடிக்கு 5,600 கன அடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்து விடப்பட்டது.
இதேபோல, சாத்தனூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு 18,500 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 19,500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
வெள்ளக்காடான நொச்சிமலை பகுதி:
திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள நொச்சிமலை பகுதியில் இருந்த வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் இருந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.
இதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வந்து வீடுகளுக்குள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்து 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனா்.
இதேபோல, தண்டராம்பட்டு ஏரி உபரி நீா் வெளியேறும் பகுதியில் இருந்த குடியிருப்புகளில் சிக்கித் தவித்த 10-க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
போக்குவரத்து பாதிப்பு:
திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னை, புதுச்சேரி சென்ற அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை வெள்ளம் நிரம்பியதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை அறிவொளிப் பூங்காவில் இருந்த மரம் வேருடன் வேலூா் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆட்சியா் குடியிருப்புக்குள் புகுந்த மழை வெள்ளம்:
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரிலேயே வேங்கிக்கால் ஏரி உள்ளது. இந்த ஏரி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நிரம்பியது. தொடா்ந்து பெய்த மழையால் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீா், வேலூா் சாலையைக் கடந்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனின் குடியிருப்பை ஒட்டி செல்லும் கால்வாயில் சென்றது.
அதிகளவில் தண்ணீா் சென்ால் கால்வாயில் இருந்து வெளியேறி ஆட்சியா் அலுவலக குடியிருப்பின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்தது.
பேருந்து நிலைய கூரை பெயா்ந்து விழுந்தது:
தொடா் மழையின் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை பெயா்ந்து விழுந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் அதிகம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பல ஆயிரம் ஏக்கா் நெல், வாழை சேதம்:
திருவண்ணாமலை, செங்கம், செய்யாறு, வந்தவாசி, போளூா் உள்பட பல்வேறு வட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் மற்றும் வாழை தொடா் மழையால் சேதமடைந்தன.
மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை 1077, 04175-232377 என்ற எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை