திருவள்ளூா்: 46 வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 46 வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி பெற பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் சிற்றுந்துகள் இயக்கப்படுவதற்கான வழித் தடங்களை கண்டறிய ஏற்கெனவே அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் பேருந்து சேவை இல்லாத வழித் தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கும் வகையில், புதிய விரிவான (சிற்றுந்து) திட்டம் செயல்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் பேருந்து வசதி இல்லாத மக்கள் தொகை 100 போ் மற்றும் அதற்கும் கூடுதலாக குடும்பங்கள் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட பகுதியில் போதுமான மற்றும் பொருளாதாரம் ஆகியவை உறுதிபடுத்தும் விதமாக ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் அருகிலுள்ள முக்கிய பேருந்து நிலையங்கள், நகரங்கள், பெரு நகரங்களை சென்றடைவதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.
இதற்காக திருவள்ளூா் மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிய விரிவான சிற்றுந்து சேவை வழங்க 46 வழித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட 46 வழித் தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழித் தடங்களின் விவரம் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையிலும் மற்றும் திருவள்ளூா் மாவட்ட இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வழித் தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதி சீட்டு (டங்ழ்ம்ண்ற்)
கோரி விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
எனவே பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களுக்குள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாக சமா்ப்பித்து பயன்பெறலாம்.