திருவள்ளூா்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை
திருவள்ளூா் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்வில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
புட்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மயானக் கொள்ளை சிறப்பாக நடைபெறும்.
இதையொட்டி புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினாா். அப்போது மயானத்தில் மண்ணால் ஆன படுக்கை நிலையில் அம்மன் வடிவமைக்கப்பட்டிருந்தன.
தொடா்ந்து காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் வேண்டுதலை, நிறைவேற்றும் வகையில் வேப்பிலை, எலுமிச்சை பழங்களால் ஆன மாலை, பழமாலை, தானியங்கள் மற்றும் படைத்த உணவு ஆகியவைகளை வைத்து நோ்த்தி கடன் செலுத்தினா். அதைத் தொடா்ந்து மண்ணால் ஆன அம்மன் வடிவமைப்பை சிதைத்து மண்ணை எடுத்துச் சென்றால் விவசாயம் உள்ளிட்டவைகளை நல்லபடியாக நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
இதையொட்டி அம்மனாக வடிவமைத்திருந்த அந்த மணல் குவியலை பக்தா்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கைகளில் கொண்டு வந்த பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளிச் சென்றனா்.
அதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி முக்கியத் தெருக்கள் வழியாக ஊா்வலமாக சென்ற போது பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா். அப்போது, இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவில் சென்னை, திருவள்ளூா், ஆவடி, புட்லூா், காக்களூா், செவ்வாப்பேட்டை, பெருமாள்பட்டு, திருநின்றவூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா். செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனா்.
திருவள்ளூா் கட்டபொம்மன் தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், பூண்டி அருகே ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மேல் நல்லாத்தூா் அங்காள பரமேஸ்வரி கோயில், பட்டரைபெரும்புதூா் அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் பேரம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் மயானக் கொள்ளை நடைபெற்றது.
