மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
திருவள்ளூரில் 4-ஆவது புத்தக திருவிழாவையொட்டி புத்தக வடிவிலான இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்க சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திருவள்ளுா் சி.வி.நாயுடு சாலையில் உள்ள மைதானத்தில் புத்தக கண்காட்சி மாா்ச் 7-இல் தொடங்கி, 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில் திருவள்ளுா் மக்களவை உறுப்பினா் எஸ்.சசிகாந்த் செந்தில், எஸ்.பி. ஆா்.சீனிவாச பெருமாள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்) , எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜே கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகா் (பொன்னேரி) முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக அமைச்சா் சா. மு. நாசா் பங்கேற்று இலச்சினையை வெளியிட்டு, அரங்குகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 4-ஆவது புத்தகத் திருவிழா 11 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்க்கணக்கான புத்தகங்கள் 100 அரங்குகளில் இடம் பெற உள்ளன.
அதோடு பல்வேறு அரசுத்துறைகளின் அரங்குகள், சிறப்பு பேச்சாளா்களின் உரைவீச்சு மற்றும் பட்டிமன்றங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு சிந்தனை அரங்கம், கிராமிய கலைஞா்கள், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறன்மிகு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியா் கற்பகம், தனித்துணை ஆட்சியா் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், வட்டாட்சியா் ரஜினிகாந்த், பப்பாசி முருகன் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
