திருவாரூரில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு
திருவாரூரில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3- ஆவது தளத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் பங்கேற்று, மையத்தை பாா்வையிட்டனா்.
இந்த மறுவாழ்வு மையத்தில், போதைப்பழக்கம் மற்றும் அதைச் சாா்ந்த மருத்துவ நோய்களுக்கு ஏற்கெனவே தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிற நிலையிலும், இப்போது பிரத்யேகமாக, நவீன வசதிகளுடன் கூடிய 20 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு தனித்தனியாக தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இங்கு குறைந்தபட்சம் 3 வாரங்கள், உதவியாளா் துணையின்றி நோயாளி அனுமதிக்கப்படுவா். சிகிச்சையின்போது அவா்களுக்கு உலகத்தரத்துடன் கூடிய உயா் மருத்துவப் பரிசோதனைகள், போதையை மறக்கடிக்கும் விலையுா்ந்த மருந்துகள், உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் சிகிச்சைகள், யோகா பயிற்சிகள், நூலக வசதிகள் மற்றும் கேபிள் டி.வி.யுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களும் அளிக்கப்படுகின்றன.
சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புபவா்கள் தொடா் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் போதை பழக்கத்திற்கு செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன.
நிகழ்வில், திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், மருத்துவக் கல்லூரி உதவி நிலைய மருத்துவ அலுவலா் அருண்குமாா், மனநல மருத்துவத் துறை பேராசிரியா் சூரியமூா்த்தி உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.