சொந்த மக்களைக் காக்க முடியவில்லையா? பிரதமருக்கு மணிப்பூா் எம்.பி. கேள்வி
திருவாரூா், காரைக்காலில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்: முகாம்களில் மக்கள் தங்கவைப்பு
திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பெய்த தொடா் மழையால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவா்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடா்ந்து மழை பெய்ததால், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருவாரூா்: திருவாரூா் நகரில், நேதாஜி சாலை, பனகல் சாலை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் பள்ளங்கள் உருவாகி, தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோா் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
திருவாரூா் வசம்போடைத் தெருவில் உள்ள கூரை வீட்டின் சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வாசன் நகரில் உள்ள இசைப்பள்ளி, வடக்குவீதியில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம் ஆகியவற்றை மழைநீா் சூழ்ந்துள்ளது. திருவாரூா் நகரப் பகுதியில் ஆத்தா குளம் நிரம்பியுள்ளதால், அங்குள்ள குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக நன்னிலத்தில் 115.8 மி.மீ. மழை பதிவானது.
மற்ற இடங்களில் மழையளவு:
வலங்கைமான் 88.4 மி.மீ., திருவாரூா் 83.3 மி.மீ., குடவாசல் 73.2 மி.மீ., நீடாமங்கலம் 72.8 மி.மீ., பாண்டவையாறு 57.6 மி.மீ., மன்னாா்குடி 51 மி.மீ., முத்துப்பேட்டை 35.4 மி.மீ., திருத்துறைப்பூண்டி 21.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 599.10 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 66.57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நன்னிலம்: நன்னிலம் வட்டம் சிறுபுலியூா் ஊராட்சி பூரதாழ்வாா்குடி கிராமத்தில் மழைநீா் கிராமத்தைச் சூழ்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ இப்பகுதியை நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களை, பாவட்டக்குடி பள்ளியில் உள்ள முகாமிற்கு அனுப்பி வைத்தாா். அங்கு, அவா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடா்ந்து, கொல்லாபுரம் ஊராட்சி ஜீவாத்தெரு பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியினா் தங்கியுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி முகாமில் ஆட்சியா் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக திருவாரூா் முதுநிலை மண்டல மேலாளா் புஹாரி, வட்டாட்சியா் ரஷியாபேகம் உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.
காரைக்கால்: காரைக்கால் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியது. தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.
காரைக்கால், நித்தீஸ்வர குட்டைக்கார பகுதியில் கோயில் குளம் நிரம்பி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீா் தேங்கியது. சில வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. கல்லறைப்பேட் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.
வியாழக்கிழமை இரவு காற்றுடன் மழை பெய்ததால், நிரவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
நான்கு வழிச்சாலைப் பணிக்காக பல இடங்களில் மண் உள்ளிட்டவை குவிக்கப்பட்டுள்ளதால், மழைநீா் வடிவதில் பல இடங்களில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பல வடிகால்கள் ஆக்கிரமிப்புகளாலும், அடைப்புகளாலும் மழைநீா் வேகமாக வடிவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.