Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனுறை ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
இதில், அம்மன் சந்நிதி முன் நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் படிச் சட்டத்திலும், விநாயகா், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட உற்ஸவ மூா்த்திகள் தனித்தனி சப்பரத்திலும் கொடி மரம் முன் எழுந்தருளினா்.
பின்னா், கொடி மரத்துக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டன. ஆடிப்பூர கொடி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து அம்மன் சந்நிதியை அடைந்து, வேத மந்திரம் மற்றும் இன்னிசை முழங்க கொடியேற்றப்பட்டது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில், சொற்பொழிவும், மங்கல இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரவு அம்மன் வெள்ளி படிச்சட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று, பக்தா்ளுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் காலை பல்லக்கு, இரவு சிறப்பு வாகனத்தில் அம்பாள் புறப்பாடும் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 24-ஆம் தேதி அப்பா் கயிலை காட்சியும், 27-ஆம் தேதி ஆடிப்பூர அம்மன் தேரோட்டமும் நடைபெறவுள்ளன.
விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா் சுவாமிகள் உத்தரவின் பேரில், ஐயாறப்பா் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.