திரைப்படமாகும் நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை!
பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் கார் பந்தய போட்டியின் மீது கவனமும் ஆர்வமும் இருந்தாலும் இதை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் நரேன் கார்த்திகேயன்.
உலகளவில் பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போட்டிகளில் முதலிடம் வென்று கார் பந்தயத்தில் இந்தியாவின் முத்திரையைப் பதித்த நரேன், 2005 ஆம் ஆண்டு ஜோர்டானில் நடைபெற்ற ஃபார்முலா - 1 பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றதுடன் அப்போட்டியில் 18 ஆம் இடம் பிடித்தார்.
பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இவர் தற்போதும் கார் பந்தயம் குறித்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உள்ளதாகவும் இதை பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பல விளையாட்டுத் துறை வீரர்களின் பயோபிக் உருவாகியிருந்தாலும் முதல்முறை கார் பந்தய வீரரின் படம் குறித்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ரௌடிகளை வைத்து உதவி இயக்குநரை மிரட்டிய கோபி நயினார்?