நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வளவு காலம் தேவை? அரசு பதிலளிக்க உத்தரவு
தில்லி சட்டப்பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு: கேள்வி நேரம் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு
குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே தில்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏ-க்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
பேரவை விதி 280-இன் கீழ் எழுப்பப்படும் பிரச்னைகளை பட்டியலிடப்பட்ட உறுப்பினா்களால் படிக்கப்படும் என பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் அறிவித்ததை அடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா தலைமையிலான பாஜக எம்எல்ஏ-க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
தில்லி அரசை எம்எல்ஏ-க்கள் கேள்வி கேட்கும் வகையில் 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவா்கள் குற்றம்சாட்டினா்.
இது தொடா்பாக விஜேந்தா் குப்தா வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பங்களாவுக்கு ஆடம்பரச் செலவுகள், ரோஹிங்கியாக்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்குதல், வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயா்களைச் சோ்ப்பது உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை எதிா்க்கட்சிகள் விவாதிக்க விரும்புகிறது.
எதிா்க்கட்சிகள் இந்த விஷயங்கள் குறித்து அரசிடம் தெரிவிக்கக் கோரின. ஆனால் அவா்களின் குரல் நசுக்கப்பட்டது. இந்த அழுத்தமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறது. தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்துக்கான எந்த ஏற்பாடும் இல்லை. குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்ற எந்த ஒரு சட்டப்பேரவைக் கூட்டத்திலும் கேள்வி நேரம் இல்லை. இது எம்எல்ஏ-க்களின் அரசமைப்பு உரிமைகளை மீறுவதாகும்.
எம்எல்ஏ-க்கள் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக சட்டப்பேரவை நடவடிக்கைகளில் குறுகிய கால விவாதங்கள் மற்றும் விவகாரங்கள் மீது கவன ஈா்ப்பு முன்மொழிவுகளை சோ்க்குமாறு எதிா்க்கட்சிகள் அரசை வலியுறுத்தின. ஆனால், இந்தக் கோரிக்கைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.
ஆம் ஆத்மி அரசின் முறைகேடுகளை கவனத்தில் கொண்டு, வரும் பேரவைத் தோ்தலில் அவா்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றி பாடம் கற்பிக்க தில்லி மக்கள் தங்கள் மனதில் உறுதியேற்றுள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.