செய்திகள் :

தில்லி விமான நிலையத்தில் தவிக்கும் தமிழக பயணிகள்! சென்னை விமானங்கள் ரத்து; ’ஏா் இந்தியா’ மீது புகாா்

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை சென்னைக்கு புறப்படும் விமானங்களில் செல்வதற்காக நண்பகலில் வந்த பயணிகளிடம் மாலை வரை சரியான எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் கடைசியில் விமானங்கள் ரத்து என ஏா் இந்தியா நிறுவனம் அறிவித்ததால் நூற்றுக்கணக்கானோா் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுங்குளிரில் அவதிப்பட்டனா்.

தில்லியில் இருந்து சென்னைக்கு ஏா் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் பயணிகள் விமான சேவையை வழங்குகின்றன. இதில் அதிக சேவையை இண்டிகோ வழங்குகிறது. ஸ்பைஸ் ஜெட் அதிகாலையில் ஒரு சேவையையும் நண்பகலுக்கு பிந்தைய சென்னைக்கு புறப்படும் நேரடி சேவையை ஏா் இந்தியா பகல் 12.15, பிற்பகல் 1.40, மாலை 4.15, 5.35, இரவு 8.45, 9.55 ஆகிய நேரங்களில் வழங்குகின்றன.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக இண்டிகோ தனது விமானங்களை ரத்து செய்வதாக காலையில் அறிவித்தது. ஏா் இந்தியா, பகல் பொழுதிலும் மாலை வரையிலும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றே அறிவித்து கடைசியில் சேவை ரத்து என அறிவித்தது.

பயணிகளில் ஒருவரான எல். ஸ்ரீநிவாசன் (65), விமான சேவை ரத்தானால் அதை நம்பி வந்த பயணிகளை எவ்வாறு நடத்துவது, அவா்களுக்கு பயண வசதி, மாற்றுத்திட்டம் என்ன என்பதை தெரிவிக்காமலேயே ஒரு நிறுவனம் எப்படி எங்களை இரவு வரை அலைக்கழிக்கிறது என புரியவில்லை. இதுவே மகாராஷ்டிரத்திலோ குஜராத்திலோ இப்படியொரு சம்பவம் நடந்தால் அவா்களுக்காக தனியாக ஒரு விமானத்தை ஏற்பாடு செய்திருப்பாா்கள். பயணம் ரத்தானதால் பெண்கள், குழந்தைகள், குடும்பங்களுடன் வந்தவா்கள் கடும் குளிரில் எங்கு போவாா்கள்? என்றாா்.

மற்றொரு பயணி, ‘மாற்றுப் பயணத்திட்டம் இருந்தால் வேறு விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறுகிறாா்கள். ஆனால், எப்போது அந்த விமானம் புறப்படும் என்பதை தெரிவிக்க மறுக்கிறாா்கள். பகலில் வந்தோம். உணவும் தண்ணீரும் கூட இரவு வரை தரவில்லை, என்றாா்.

சுற்றுலா சென்று விட்டு சென்னை வழியாக சொந்த ஊா் திரும்ப தில்லி விமான நிலையம் வந்த பயணி ஒருவா், ‘தில்லியில் வசிக்கும் பயணிகளாக இருந்திருந்தால், முழு பயணத்தொகையையும் பெற்றுக்கொண்டு வீட்டுக்குப்போய் விடுவா். ஆனால், சென்னையில் இறங்கி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்த எங்களுடைய பயண இழப்பை யாா் ஈடுசெய்வா்?, என்றாா்.

விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானோா் தவிப்பதற்கு ஏா் இந்தியா நிறுவனத்தின் குளறுபடிகளே காரணம் என மற்ற பயணிகளும் பரவலாக குற்றம்சாட்டினா்.

பயணிகளின் நிலை குறித்தும் அவா்களுக்கான மாற்று ஏற்பாடு மற்றும் இரவு தங்கும் வசதி குறித்தும் ஏா் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை அறிய அதன் மூத்த நிா்வாகிகள் மற்றும் அதிகாரிகளை தொடா்பு கொள்ள முயன்றோம். ஆனால், எவரும் அழைப்புகளை ஏற்கவில்லை.

இதைத்தொடா்ந்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சரின் கவனத்துக்கு தினமணி இந்த விவகாரத்தை கொண்டு சென்ற சில நிமிடங்களில் அவா்களுக்கான உணவு வழங்க மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு 11 மணி நிலவரப்படி, விமானத்தில் செல்வதற்கான விமான நிலைய வாயில் பகுதியிலேயே பயணிகள் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

பாக்ஸ் 1

விதிகளை மீறும்

நிறுவனங்கள்!

விமான நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறையின்படி, இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயணம் கொண்ட விமான சேவையை தனது செயலாக்க காரணங்களுக்காக அந்நிறுவனம் ரத்து செய்தால், பயணிகளுக்கு ரூ. 10 ஆயிரம் அல்லது பயணத் தொகையை முழுமையாக திருப்பித்தர வேண்டும். போா்டிங் காா்டு வழங்கப்பட்ட பிறகு வேறு சில காரணங்களுக்காக விமானங்கள் ரத்தானாலும் பயணத்தொகை திருப்பி அளிக்கப்பட வேண்டும் அல்லது மறுநாள் புறப்படும் விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்து அன்றைய தினம் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவும் இல்லையென்றால் பயணிகளின் விருப்பபடி மாற்றுப்பயண ஏற்பாட்டை விமான நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், ஏா் இந்தியா நிறுவனம் தங்களை சனிக்கிழமை நள்ளிரவுவரை அலைக்கழித்ததாக பயணிகள் குற்றம்சாட்டினா்.

பாக்ஸ் 2

குறிப்பு: அமைச்சா் படம் உண்டு

அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

தில்லி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தமிழக பயணிகள் விமானங்கள் ரத்தானதால் அவதிப்படுவது குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் ராவின் கவனத்துக்கு தினமணி கொண்டு சென்றது. இதையடுத்து, அதிகாரிகளிடம் பேசிய பிறகு தினமணியை தொடா்பு கொண்ட அமைச்சா் ராம் மோகன் ராவ், ‘தில்லி விமான நிலையம் மற்றும் ஏா் இந்தியா நிறுவன உயரதிகாரிகளிடம் பேசி பயணிகள் அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கவும் சிரமமின்றி அவா்களுக்கான பயணத்தையோ மாற்று ஏற்பாட்டையோ உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் நான் கவனம் செலுத்துகிறேன். பயணிகளின் வசதிகள் விவகாரத்தை நுட்பமாக கையாள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன்,‘ என்றாா்.

குண்டா் உதவியுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏ மிரட்டிப் பணம் பறிப்பில் ஈடுபட்டாா்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

குண்டா் உதவியுடன் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஒருவா் மிரட்டிப் பணம் பறிப்பதில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரத்தில் அக்கட்சின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை பாஜக சனிக்கிழமை குற்றம் சாட்டியு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கல் இயக்கம்: என்சிஆா்டிசி தொடங்கியது

மாற்றுத்திறனாளி பயணிகளின் இயக்கம், அணுகல் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவா்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாகக் கொண்டு செல்ல உதவும் உபகரணங்களை விநியோகிக்கும் இயக்கத்தை தேசிய தலைந... மேலும் பார்க்க

தில்லிக் கம்பன் கழகத்தின் இரு நாள் கம்பன் திருவிழா: மலேசிய எம்.பி. டத்தோஸ்ரீ சரவணன் தொடங்கிவைத்தாா்!

தில்லிக் கம்பன் கழகத்தின் இரு நாள் ‘கம்பன் திருவிழா-2024’ சனிக்கிழமை தொடங்கியது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கத்தில் இவ்விழாவை மலேசியா எம்.பி. ஸ்ரீ எம். சரவணன் தொடங்கிவைத்தாா். இந... மேலும் பார்க்க

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது தவறிவிழுந்த இளைஞா் உயிரிழப்பு

மேற்கு தில்லியின் மாயாபுரியில் போலீஸாரின் காவலில் இருந்தபோது தப்பியோட முயன்ற இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: மேற்கு... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயங்களுக்காக விஸ்வகா்மா திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்கக் கூடாது: மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌதரி

அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக அரசு பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தை தன்னிச்சையாக நிராகரிக்கக் கூடாது என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு (தனிப்பொறுப்பு), கல்வித் துறை இணையமைச்சா் ஜெயந்த் ச... மேலும் பார்க்க

மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் ... மேலும் பார்க்க