தீண்டாமைக்கு எதிரான இரு சக்கர வாகன பேரணி: பரிசீலித்து அனுமதி அளிக்க உத்தரவு
மதுரையில் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான இரு சக்கர வாகனப் பேரணி நடத்த காவல் உதவி ஆணையா் பரிசீலித்து அனுமதி வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
அய்யா்பங்களா பகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் தீபம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ஜாதிய தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக வருகிற வெள்ளிக்கிழமை (பிப். 28) காலை 11 மணிக்கு மதுரை அம்பேத்கா் சிலையிலிருந்து, அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை வரை இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருந்தோம். இதற்கு அனுமதி கோரி கடந்த 22-ஆம் தேதி தல்லாகுளம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம். காவல் துறையினா் அனுமதி வழங்கவில்லை.
எனவே, தல்லாகுளம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலையிலிருந்து, திருவள்ளுவா் சிலை வரை இரு சக்கர வாகனப் பேரணி செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்திலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை இரு சக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவல் உதவி ஆணையரிடம் மனுதாரா் தரப்பில் புதிதாக மனுவை அளிக்கவும், அதை அவா் பரிசீலித்து உரிய அனுமதி வழங்கவும் உத்தரவிட்டாா்.