மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!
`தீபம் நிச்சயம் எரியும்; விலை மதிப்பற்ற மனித உயிர்களும் முக்கியம்’ - அமைச்சர் சேகர் பாபு சொன்னதென்ன?
திருவண்ணாமலை ஆன்மிக பூமியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது இயற்கை சீற்றம்.
கடந்த 1-12-2024 அன்று கோயில் `தீப’ மலையில் ஏற்பட்ட நிலச்சரிவுக் காரணமாக டன் கணக்கிலான பாறைகளும் உருண்டுவந்து ராஜ்குமார் என்ற கூலித் தொழிலாளியின் வீட்டின் மீது விழுந்தது. அந்த வீடு நொடிக்குள் தவிடுபொடியானது. இந்த துயரச் சம்பவத்தில் ராஜ்குமார், அவரின் மனைவி மீனா மற்றும் ஐந்து குழந்தைகள் என மொத்தமாக 7 பேர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்து மாண்டுபோனார்கள்.
மழை ஓய்ந்த பிறகும்கூட 2,668 அடி உயரமுள்ள தீப மலையைச் சுற்றிலும் கண்ணுக்கே தென்படாத மேற்பரப்பிலும், அடர்ந்த வனப்பரப்பிலும் தேங்கியிருக்கும் மழைநீரால் கட்டுக்கடங்காமல் நிலச்சரிவு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது என எச்சரிக்கின்றனர் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள். `மீண்டுமொரு பெரிய அபாயம் ஏற்படலாம்’ எனவும் பேரிடர் மேலாண்மைத்துறைப் பேராசிரியர்களும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் நாளை மறுநாள் (டிசம்பர் 13-) நடைபெறவிருக்கும் `மகா தீப’ திருவிழாவில் மலைமீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்பை இன்று (டிசம்பர் 11) வெளியிட்டிருக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய சேகர் பாபு, ``புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் தலைமையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் அடங்கிய 8 பேர் குழுவினர் மூன்று நாள்கள் களஆய்வு மேற்கொண்டு நேற்று அறிக்கை சமர்பித்தனர்.
அந்த அறிக்கையில் `அதிகமான மனிதர்களை மலையின்மீது ஏற்றக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான், இந்த முறை பக்தர்கள் யாரும் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்குண்டான முறையான அறிவிப்பை திருவண்ணாமலை ஆட்சியர் வெளியிடுவார். அதே சமயம், தீபம் என்பது நிச்சயம் எரிய வேண்டும். நம் முன்னோர்கள், தமிழ்ச் சான்றோர்களால் ஏற்படுத்தப்பட்ட முறை அது. அதே நேரத்தில் விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்திலும் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். தலையாய பணியாக நினைத்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இதுகுறித்த நிலையை முதலமைச்சர் கேட்டுக்கொண்டே இருக்கிறார். தீபஒளி வீசுவதை பக்தர்கள் காண்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். இந்த தீபஒளித் திருநாளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அண்ணாமலையாரின் அருளால் இயற்கையும் உதவி புரியும்’’ என்றார்.