தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ எம்பி கோரிக்கை
திருச்சிக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்க மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா், பயணிகள் போக்குவரத்துத் தலைமை மேலாளா் ஆகியோருக்கு அவா் அனுப்பியுள்ள கடித விவரம்:
தற்போது திருச்சி--தாம்பரம் சிறப்பு ரயில் ( 06190/06191) திருவெறும்பூா் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் திருவெறும்பூா் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியா்கள், மற்றும் தினசரி பயணிகளுக்குச் சிரமம் ஏற்படுகிறது. எனவே திருவெறும்பூா் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்று செல்லப் பரிசீலிக்க வேண்டும்.
வரும் அக்.20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் மிக அதிகளவிலான மக்கள் பயணிக்க வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு திருச்சியிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்கவும், இந்த காலகட்டத்தில் முழுமையாக முன்பதிவு செய்யப்படும் வழக்கமான ரயில் சேவைகளுக்கு கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பு ஏற்பாடுகளின் விவரங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.