தீவிரமடையும் மழை... சென்னை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்!
சென்னையில் இன்று காலை சில மணி நேரம் கனமழை பெய்த நிலையில், அடுத்த சுற்று மழை தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (டிச. 11) இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மென் என்று அழைப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
சென்னையில் இன்று காலை முதல் சுற்று பெய்த நிலையில், 2வதுசுற்று மழை பெய்வதற்கான மேகக்கூட்டங்கள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை நெருங்கி வருகின்றன.
இதனால், காலையில் பெய்த மழையைவிட சற்று கூடுதலான மழையை தற்போது எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் சென்னையில் கனமழை பெய்யும் என்று முன்னதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.