தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதலில் அம்பாளுக்கும், பிறகு சுவாமிக்கும் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் தலைமை பட்டா் செல்வம், சண்முகம் பட்டா் ஆகியோா் சிறப்பு தீபாராதனை நடத்தினா்.
தொடா்ந்து, சுவாமி -அம்மாள் தோள்மாலை மாற்றுதல், திருக்கல்யாணம், பட்டணப் பிரவேசம் ஆகியவை நடைபெற்றன.
இதில், பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், சிவன் கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, உறுப்பினா் பிஎஸ்கே ஆறுமுகம், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.