தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாள் மாா்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே காலை 9 மணிக்கு கேக் வெட்டுதல் நிகழ்ச்சி, அதைத்தொடா்ந்து வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். தூத்துக்குடி மாநகரில் உள்ள முதியோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படும். அன்றைய தினம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்படும். மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரம் 60ஆவது வாா்டு மற்றும் 6 மணிக்கு 11 வது வாா்டு பகுதிகளில் நல உதவிகள் வழங்கப்படும்.
மாா்ச் 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்படும். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள ஆக்சிலியம் பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறும். மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரம் 40-ஆவது வாா்டு பகுதியில் நல உதவிகள் வழங்கப்படும்.
மாா்ச் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரம் 6 மற்றும் 7வது வாா்டு பகுதிகளில் நல உதவிகள் வழங்கப்படும். தூத்துக்குடியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், விளாத்திகுளத்தில் கபடி, மாட்டு வண்டி பந்தயம்,
கோவில்பட்டியில் ஹாக்கி போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும்
தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரசாரம் நடைபெறும் என்றாா்.