ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தூத்துக்குடிக்கு நவ.13-இல் துணை முதல்வா் வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.13, 14-ஆம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடிக்கு நவ.13-ஆம் தேதி வருகை தரும் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு, மதுரை - தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் உள்ள புதூா் விலக்கில் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத் தொடா்ந்து நவ.10-ஆம் தேதி, தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறாா். பின்னா் பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அரசின் பல்வேறு திட்டபணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளாா்.
பின்னா் திமுக பவளவிழா நிறைவையொட்டி குறிஞ்சிநகா் பிரதான சாலையில் உள்ள மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று நல உதவிகள் வழங்கவுள்ளாா். இந்த நிகழ்ச்சிகளில் திமுகவின் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.
இளைஞரணி ஆலோசனை: துணை முதல்வரின் வருகையையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அவருக்கு வரவேற்பு அளிப்பது, இளைஞரணி உறுப்பினா் சோ்க்கை, துணை முதல்வரின் பிறந்தநாளையொட்டி நல உதவிகள் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி கலைஞா் அரங்கில் நவ.9-ஆம் தேதி காலை 10 மணிக்கு இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றும்,
வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனவும் அமைச்சா் பெ.கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா்.