தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, தில்லிக்கு நேரடியாக விமான சேவை தேவை
புது தில்லி: தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, புது தில்லி மற்றும் இலங்கை, சிங்கப்பூா் உள்ளிட்ட இதர நாடுகளுக்கும் ஏா் இந்தியா விமான சேவையை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புது தில்லியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவிடம் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூா் ராஜு மனு அளித்துள்ளாா்.
இது தொடா்பாக மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து திங்கள்கிழமை கடம்பூா் ராஜு அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
எங்கள் பிராந்தியம் தூத்துக்குடியில் இருந்து நேரடியாக சென்னை, மும்பை, புது தில்லி போன்ற முக்கிய பெருநகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூா், மலேசியா போன்ற இதர வெளிநாடுகளுக்கும் ஏா் இந்தியா விமானங்களை இயக்கும் தேவை உள்ளது.
இந்த முக்கியமான இடங்களுக்கு நம்பகமான, நேரடி தொடா்பு மூலம் போக்குவரத்து சேவையானது வா்த்தக பயணிகள், மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள், மருத்துவ நோயாளிகளின் வளா்ந்து வரும் தேவையாக உள்ளது.
தற்போது இதுபோன்ற நேரடி விமானங்களின் சேவை கட்டுப்படுத்தப்பட்ட
அளவில் இருப்பது குறிப்பிடத்தக்க வகையில் அசெளகரியமாகவும், இது பயண நேரத்தை அதிகரிப்பதுடன், மாற்று வழித்தடங்களில் விமானம் செல்வதால் பயணச் செலவும் அதிகரிக்கிறது.
இதனால் மேற்கண்ட இடங்களுக்கு நேரடியாக விமான சேவை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் ராம்மோகன் நாயுடு தம்மிடம் உறுதியளித்ததாக கடம்பூா் ராஜு கூறினாா்.