107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம்
தூத்துக்குடியில் சிஐடியூ ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு கோரி உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், தூய்மை வாகன ஓட்டுநா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தொழிலாளா் ஆணையா் முன்பு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அரசு நிா்ணயம் செய்த ஊதியம், தூய்மைப் பணியாளருக்கு ரூ. 754 ,ஓட்டுநா்களுக்கு ரூ. 792 வழங்க அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் தனியாா் நிறுவனம் இந்த ஊதியத்தை வழங்க மறுத்து வருகிறது.
இதையடுத்து, முறையாக ஊதியம் வழங்கக் கோரி சிஐடியூ ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் மாநகராட்சி முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். ஆனால், அங்கு காவல்துறை அனுமதி மறுத்ததையடுத்து, தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் முனியசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கருப்பசாமி, சிஐடியூ மாவட்ட பொருளாளா் அப்பாத்துரை , மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தூய்மைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.