தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் வழங்கினாா்
மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மறைந்த முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் அமைதி பேரணி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நாகை தளபதி அறிவாலயத்தில் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தளபதி அறிவாலயத்தில் அமைந்துள்ள மறைந்த முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், நகரச் செயலா் இரா. மாரிமுத்து உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 103 போ், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் 40 போ் என மொத்தம் 143 பேருக்கு வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றை அமைச்சா், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் ஆகியோா் வழங்கினா். நகா்மன்ற துணைத் தலைவா் செந்தில்குமாா், நகர துணைச் செயலா்கள் திலகா், சிவா, திருமருகல் ஒன்றிய செயலா் செல்வ செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.