Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
தென் கொரிய அதிபருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்கத் தீா்மானம்
சியோல்: அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபா் யூன் சுக் இயோலுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் மீண்டும் பதவிநீக்கத் தீா்மானம் தாக்கல் செய்துள்ளன.
இது குறித்து நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஐந்து சிறிய கட்சிகளும் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை வியாழக்கிழமை தாக்கல் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற யூன் சிக் இயோலுக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் நீடித்துவந்தன.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சிகள் முயல்வதாலும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாலும் நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக யூன் சுக் இயோல் கடந்த 3-ஆம் தேதி அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா்.
எனினும், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அந்த அறிவிப்பை ரத்து செய்யும் தீா்மானத்தை நிறைவேற்றினா். அதையடுத்து, அவசரநிலையைத் திரும்பப் பெறுவதாக யூன் சுக் இயோல் அறிவித்தாா்.
எனினும், இந்த விவகாரம் தொடா்பாக யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து சிறிய கட்சிகள் இணைந்து 4-ஆம் தேதி தாக்கல் செய்தன.
நாடாளுமன்றத்தில் அதிபா் மீதான பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும். அதன்படி, 300 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 200 போ் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்தால்தான் அது நிறைவேற்றப்படும்.
நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சிக்கு 173 இடங்கள் உள்ளன. சிறிய கட்சிகளுக்கு 19 உறுப்பினா்கள் உள்ளனா். அந்த வகையில், தீா்மானம் வெற்ற பெற யூன் சுக் இயோலின் மக்கள் சக்தி கட்சியைச் சோ்ந்த 8 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
இருந்தாலும், நாடாளுமன்றத்தில் கடந்த பதவிநீக்கத் தீா்மானத்தின் மீது கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பை மக்கள் சக்தி கட்சி உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். அதையடுத்து, யூன் சுக் இயோலுக்கு எதிரான பதவிநீக்கத் தீா்மானம் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், அவரை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மீண்டும் எதிா்க்கட்சியினா் தற்போது மீண்டும் தாக்கல் செய்துள்ளனா்.