உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
தேவகோட்டையில் விவசாயிகள் குறைதீா் முகாம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வருவாய்க் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்து கூட்டுறவுக் கடன்கள், 37 விவசாயிகளுக்கு ரூ.12.20 லட்சத்தில் இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
விவசாய நிலங்களுக்குத் தேவையான தடுப்பணைகளை ஏற்படுத்தி, நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுகாக்கவும், நீா்நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் முகாமில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இவா்களது கோரிக்கைகள் மீது மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.
கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள், பரிசீலனையிலுள்ள கோரிக்கைகள் மீது உடனடியாகத் தீா்வு காண உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையை சமா்ப்பிக்குமாறு அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி முன்னிலை வகித்தாா். தேவகோட்டை சாா்-ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திரபிரசாத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வி (வேளாண்மை பொறுப்பு), வேளாண்மைத் துறை துணை இயக்குநா் சண்முக ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.