தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள சிஐஜி மிஷன் தேவாலயம் அமைந்துள்ள இடத்தை திருச்சபையின் நிா்வாக குழுவுக்குத் தெரியாமல் விற்பனை செய்ய முயற்சிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகத்தில் தேவாலய நிா்வாகிகள் புகாா் மனு அளித்தனா்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் சிஐஜி மிஷன் தேவாலயம் அமைந்துள்ள இடம் அரசால் பேராலயத்துக்கு வழங்கப்பட்ட இடமாகும். இது நிபந்தனைக்குள்பட்ட நிலவியல் பட்டா என்பதால் இதை அனுபவித்துக் கொள்ளலாமே, தவிர உரிமை மாற்றம் செய்யவோ, விற்பனை செய்யவோ இயலாது.
இந்த நிலையில் பெங்களூரு சிஐஜி மிஷன் நிா்வாகிகள் எனக் கூறப்படும் சில போ் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள தேவாலய இடத்தை சட்டத்துக்குப் புறம்பாக மூன்றாம் நபா் ஒருவருக்கு விற்பனை ஒப்பந்தம் ஏற்படுத்தி பண மோசடி செய்துள்ளனா். இவா்கள் மூன்று போ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.