செய்திகள் :

'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்

post image

'இனி யாரும் எதுவும் செய்ய முடியாது!'

பா.ம.க-வில் ராமதாஸ், அன்புமணியிடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்தது. கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அது பகிரங்கமாக வெடித்தது. அந்தக் கூட்டத்தில் ராமதாஸ் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணிச் செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையிலேயே மைக்கை வீசிவிட்டுச் சென்றார். அதன்பிறகு பா.ம.க-வில் தினமும் புதுப்புது பஞ்சாயத்துக்கள் கிளம்பி வருகின்றன.

பாமக அன்புமணி
பாமக அன்புமணி

குறிப்பாக மகன் அன்புமணி மீது பல பகீர் குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் சுமத்தி வருகிறார். இந்தச்சூழலில் கடந்த 15.9.2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க செய்தித் தொடர்பாளரும் அன்புமணியின் ஆதரவாளருமான வழக்கறிஞர் கே.பாலு, "தேர்தல் ஆணையம் பா.ம.க தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை இந்த அங்கீகாரம் இருக்கும்" என்றார். இதனால், ராமதாஸ் தரப்பு கொதிநிலையின் உச்சத்துக்கே சென்றனர்.

மறுநாள் டெல்லி சென்ற ராமதாஸின் ஆதரவாளரும் கட்சியின் கௌரவத் தலைவருமான ஜி.கே.மணி தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்றைக் கொடுத்தார். அதில், 'கட்சியின் தலைவராக ராமதாஸை அங்கீகரிக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் பா.ம.க சார்பில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இணைத்திருந்தார்.

ஜி.கே மணி | பாமக
ஜி.கே மணி | பாமக

ஆனாலும் தேர்தல் ஆணையத்திடமிருந்து எதிர்பார்த்த பதில் ராமதாஸ் தரப்புக்கு கிடைக்கவில்லை. இப்படியான பரபரப்பான சூழலில் 12.11.2025 அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி கூட்டினார். அதில் மைக் பிடித்தவர், "பா.ம.க-வின் தலைவராகத் தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது. மாம்பழ சின்னமும் நமக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இனி யாரும் எதுவும் செய்ய முடியாது" எனக்கூறி ராமதாஸ் தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசியவர், "தேர்தலின்போது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஏ, பி படிவங்களில் கையெழுத்து இடுவதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் எனக்கு வழங்கியுள்ளது. நீதிமன்றம் சென்றாலும் இதனால் எதுவும் ஆகப்போவதில்லை" எனக் கூறி ராமதாஸை சீண்டினார். இதில் ராமதாஸ் தரப்பு கோபத்தின் உச்சத்துக்குச் சென்றது.

Election Commission of India (ECI)
தேர்தல் ஆணையம் - ECI

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே மணி, "2022-ல் நடந்த பா.ம.க பொதுக்குழுவில் தலைவராக மருத்துவர் அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆக்ஸ்ட் 28-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால், 2023-ம் ஆண்டுப் பா.ம.க பொதுக்குழு நடந்ததாகவும், 2026 ஆகஸ்ட் வரையில் தனக்கு பதவிக்காலம் இருப்பதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்தில் அன்புமணி வழங்கிவிட்டார்" எனக் கொதித்தார்.

'கட்சியைத் திருடுவது போல்..'

தொடர்ந்து பேசியவர், "ஜனநாயகத்தை கட்டிக் காக்கவேண்டிய தேர்தல் ஆணையம், அன்புமணிக்கு ஆதரவாக உத்தரவை வெளியிட்டுள்ளது. இது மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. அன்புமணியின் இந்த நடவடிக்கை ஒரு கட்சியைத் திருடுவதுபோல் அமைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்துவருகிறோம். ஆனாலும் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

அன்புமணி
அன்புமணி

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்கிறார்கள். இதை எதிர்த்துத் தேர்தல் ஆணையம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம். போலியான ஆவணத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமும் அன்புமணியின் மோசடிக்குத் துணைபோயிருக்கிறது" என்றார், ஆவேசமாக.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அன்புமணி தரப்பு முற்றிலும் மறுத்தது. "அனைத்தும் விதிமுறைப்படிதான் நடந்திருக்கிறது" எனச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வழங்கறிஞர் கே.பாலு கூறினார். இதில் கடுப்பான ராமதாஸ் கடலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் மைக் பிடித்த ராமதாஸ், "எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்னைப் போல் இருப்பான்’ என்று எண்ணினேன். ஆனால், எனக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் என்னிடமிருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. நான் சிந்திய வியர்வை எல்லாவற்றையும் பறித்து விட்டார். இருந்தாலும் என்னிடமிருந்து என் உரிமையை மட்டும் பறிக்க முடியாது" என்றார் கொதிப்புடன்.

அன்புமணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மனவேதனையில் பேசியிருக்கிறார்
பாமக நிறுவனர் ராமதாஸ்

தொடர்ந்து பேசியவர், "தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மை தான் வெற்றிபெறும். எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாஸை வீழ்த்த முடியாது. உச்ச நீதிமன்றம் சென்றாலும் என் உரிமையைப் பறிக்க முடியாது. நீதிமன்றம்மீது நம்பிக்கை உள்ளது. 46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்கள் என் மக்களிடம் சென்று நான் வளர்த்த கட்சியை முழுவதும் அபகரிக்க முயற்சிக்கிறார். அப்படி உழைத்துத் தான் இந்தக் கட்சியின் தலைவராக ஆகியிருக்கிறேன்; எனக்கு உதவியாகச் செயல் தலைவராக எனது மகள் ஸ்ரீகாந்தியை நியமித்துள்ளேன்,"

'அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது!'

"கடந்த 28.5.2022 அன்று திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. ‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள்; என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டார். இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான். நான் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டபோது, ‘ஓட்டு ஒன்று போடுங்க; கட்சியின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்க’ என்று கேட்டு வளர்த்த கட்சி இது. என்னுடைய உரிமையையும் உழைப்பையும் யாராலும் திருட முடியாது. இது போன்று தானாக விரும்பி வரும் ஒரு கூட்டத்தை உங்களால் கூட்ட முடியுமா?. ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.25 லட்சத்தை முன்கூட்டியே கொடுத்துதான் உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடிகிறது. நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் அன்புமணியைப் படிக்க வைத்து டாக்டர், மத்திய மந்திரி, கட்சியின் தலைவராக நியமித்ததுதான்.

அமித்ஷா
அமித்ஷா

நான் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்து நலம் விசாரித்தனர். அன்புமணி மட்டும், கீழே உள்ள மருத்துவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டார். மக்களை ஏமாற்ற முடியாது. நீதி, நியாயம் வெற்றி பெறும். என் பக்கம் நியாயம் உள்ளது. மக்கள் என்னுடன் உள்ளனர். நான் வயிறு எரிந்து சொல்கிறேன்; அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல்தான், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் வளர்ச்சி அடையப் போகிறது. 2026-ம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை அமைச்சராக உருவாக்குவேன். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்" என வெடித்தார்.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பா.ம.க சீனியர்கள் சிலர், "ஆரம்பத்திலிருந்தே பா.ம.க-வில் சீனியர்களை அன்புமணி மதிக்காமல் செயல்பட்டது, ராமதாஸுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும் அமைதியாக இருந்துவந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென ராமதாஸ் முடிவு செய்திருந்தார். அவருக்குத் தெரியாமல் பா.ஜ.க-வுடன் கூட்டணியை இறுதி செய்தார், அன்புமணி. முடிவில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு அன்புமணியின் தவறான முடிவுதான் காரணம் என ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. அதிலிருந்துதான் இருவருக்கும் இடையிலான பிரச்னை பெரிதானது. அ.தி.மு.க தலைவர்கள் எவ்வளவு பேசியும் பெரியவர் சமாதானம் அடையவில்லை.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

இந்தசூழலில்தான் கட்சியையும் அன்புமணி கைப்பற்றிவிட்டார். இதில் ஐயா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். மறுபக்கம் அன்புமணி வரும் சட்டமன்ற தேர்தலையும் பா.ஜ.க-வுடன் இணைந்து சந்திக்கலாமென முடிவு செய்திருக்கிறார். அதேநேரத்தில் அன்புமணி வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் ராமதாஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தே.ஜ கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படும். எனவே இருவரையும் சமாதானம் செய்யப் பா.ஜ.க-வின் டெல்லி முயற்சித்து வருகிறது" என்றனர் விரிவாக.

'கதறும் ராமதாஸ்.. குளுகுளு ஏற்காட்டில் அன்புமணி..'

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "அதிகாரப்பூர்வமாக கட்சி அன்புமணியின் கையில் இருக்கிறது. ஒரு பகுதியில் 100 வாக்குகள் பா.ம.க-வுக்கு இருக்கிறது என்றால், அதில் 20 முதல் 25% வாக்குகள் ராமதாஸுக்கு கிடைக்கும். மற்றவர்கள் அன்புமணிக்குத்தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு கட்சி அன்புமணியிடம் சென்றபிறகு நியாயம் இல்லை, தர்மம் இல்லை என ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். காலம் கடந்த பின்பு டாக்டர் ராமதாஸ் யோசித்து பயனில்லை. அதேநேரத்தில் தந்தை இப்படி கதறிக்கொண்டிருக்கும்போது மகன் அன்புமணி ஏற்காட்டில் மனைவியுடன் இருக்கிறார். அங்கிருந்து மகிழ்ச்சியுடன் அப்பாவின் கதறலை ரசித்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் இருவருக்கும் இடையிலான பிரச்னை இனி பெரிதாகாது. டெல்லி பா.ஜ.க தலைமை விரைவில் சமாதானம் செய்துவிடும். அதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள்" என்றார்.

குபேந்திரன்

இதுகுறித்து ராமதாஸின் ஆதரவாளர் அருளிடம் விளக்கம் கேட்டோம், "தேர்தல் ஆணையம் கட்சித் திருட்டுக்கு துணை போய்விட்டது. அனைத்து ஆவணங்களையும் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார் சுருக்கமாக.

இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக அன்புமணியின் ஆதரவாளர் சதாசிவத்தை தொடர்பு கொண்டபோது, "நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" என்றார். அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்!

Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்

இனி தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களிலும் கட்டாயம் சஞ்சார் சாத்தி ஆப் இருக்க வேண்டும் என்றும்... ஏற்கெனவே உற்பத்தியான, விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்பை இன்ஸ்டா... மேலும் பார்க்க

"அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார்" - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க

DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?

ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால்,... மேலும் பார்க்க

Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல... மேலும் பார்க்க

UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO - நடந்தது என்ன?

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 46 வயது BLO வேலைப்பழு காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு த... மேலும் பார்க்க

"விஜய் எதிரியைச் சொல்லிவிட்டார்; கமலின் எதிரி யார்?" - கமல் சொன்ன பதில்!

கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல்ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார்.அதில் பல்வேறு கேள்விகள் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் கேட்கப்பட்டது. குறிப்பாக, 'ஒரு சீனியராக விஜய்க்கு நீங்... மேலும் பார்க்க