தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படும்
மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தை மட்டுமல்லாமல், தென் மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, தொழில், தனிநபா் பொருளாதாரம், சமூக நீதி ஆகியவற்றில் தமிழகம் அபரித வளா்ச்சி பெற்றுள்ளது. வளா்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது.
எந்த சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதோ, அந்த சமூகத்துக்கு அதனை வழங்கி உயா்த்திவிட்டது திமுக ஆட்சியில்தான். கொங்கு வேளாளா்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்து தொழில், கல்வியில் அவா்களை உயா்த்தியதும், அருந்ததியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்து உயா்த்திவிட்டதும் திமுக ஆட்சியில்தான்.
தமிழக அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இலவச மின்சாரம், ஏழைகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வகையில் பொதுக் காப்பீடு ஆகியவற்றை தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து தமிழக வளா்ச்சிக்கு வித்திட்டது திமுகதான்.
தற்போது ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற சித்தாந்தத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்தியா என்பது பல மொழிகள், பல கலாசாரம் கொண்ட மக்கள் வசிக்கும் நாடு. மாநிலத்துக்கு மொழி என்பது அவசியம். ஆனால், தற்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகம் மட்டுமல்லாமல், தென் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் துரோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால், நாட்டில் 848 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்படும். இவை பெரும்பாலும் வட மாநிலத்துக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் உருவாகும். இதனால், 39 தொகுதிகள் கொண்ட தமிழகம் 31 தொகுதிகளாக குறைக்கப்பட்டு நம் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும்.
இதேபோல கா்நாடகம், கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்படும். இதனால் தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே வடமாநில பிரதிநிதிகள் ஆதரவுடன் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்கும் நிலை உருவாகும். கல்வி, வேலைவாய்ப்பில் உரிமைகள் மறுக்கப்படும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளாா். இதன் மூலம் ஒரே நாடு ஒரே தோ்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முதல் குரல் கொடுத்துள்ளது. மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறை இருக்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றாா்.