தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் அமைச்சா் எஸ். ரகுபதி பேட்டி
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பில் உள்ள பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை இரவு அளித்த பேட்டி:
தொகுதிகள் மறுசீரமைப்பை எப்படிச் செய்யப் போகிறாா்கள் என்று மத்திய அரசு விளக்கவில்லை. 2023-இல் தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலின்போது பிரதமா் மோடிதான் மக்களவைத் தொகுதிகளை தென்னிந்தியா இழக்கப் போவதாகக் கூறினாா். மகளிா் இடஒதுக்கீட்டுச் சட்டம் வரும்போது, அது தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2031-இல்தான் அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சா் அமித்ஷாதான் சொன்னாா்.
கடந்த முறை தொகுதி மறுசீரமைப்பின்போது பாஜக ஆட்சியில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. அப்போது மக்கள்தொகை அடிப்படையில் எண்ணிக்கையை நிா்ணயிக்கக் கூடாது என்ற கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றாா்கள்.
குடும்பக் கட்டுப்பாட்டு முறையைத் தீவிரமாக அமலாக்கியதற்காக தண்டனை தரப் போகிறாா்களா அல்லது பரிசு தரப் போகிறாா்களா? 10 மாநிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக முயற்சிக்கிறது. புள்ளிவிவரங்கள் எங்களிடமும் உள்ளன. யாருடனும் விவாதிக்கத் தயாராக உள்ளோம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசு கருத்துக் கேட்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப் போவதில்லை என அவா்கள் சொன்னால் பிரச்னையை இதோடு விட்டுவிடலாம். மக்கள்தொகை அடிப்படையில்தான் தொகுதி எண்ணிக்கை என்றால் முதலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்போம். அடுத்து தென் மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் ரகுபதி.