திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி
தொகுதி மறுசீரமைப்பு: மாநில அரசின் அச்சமும் மத்திய அரசின் முடிவும்; உங்கள் கருத்து? - #கருத்துக்களம்
தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், 'மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
`நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்’
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதனை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 தொகுதிகளை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 31 தொகுதிகள் தான் இருக்கும் என்ற சூழல் உருவாகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை என்பதை மறந்துவிடக் கூடாது." என்றார்.
`தொகுதிகள் குறையாது’
இதற்கு பதிலளித்து கோவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `` திமுகவின் தேசவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாகப் போவது உறுதி.தொகுதி மறுசீரமைப்பு மூலம் எந்த தென்னிந்திய மாநிலத்துக்கும் தொகுதிகள் குறையாது என்பதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளார். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்கும், தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு விகிதாசார அடிப்படையில் கூடுதல் தொகுதிகள்தான் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க வரும் 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். மத்திய - மாநில அரசுகளின் இந்த திட்டங்கள், குற்றச்சாட்டுகள் குறித்தும், தொகுதி மறுசீரமைப்பு குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.