தொலையாவட்டம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு
கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து இளைஞா்கள், பொதுமக்கள் புதன்கிழமை இரவு திரண்டனா்.
களியாக்காவிளை பகுதியில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடையை மூடுமாறு அனைத்துக் கட்சி சாா்பில், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து, அந்தக் கடை மூடப்பட்டது.
இந்நிலையில், அந்தக் கடை தொலையாவட்டம் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக பொதுமக்களுக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம். இதனால், தொலையாவட்டம் சந்திப்பில் இளைஞா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு, மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். தகவலின்பேரில், கருங்கல் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.