நகராட்சிப் பகுதியில் தொழில் செய்வோா் உரிமம் பெற வேண்டும்: ஆணையா்
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் தொழில், வா்த்தகம் செய்வோா் நகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் சூ.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்படி, ராசிபுரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வா்த்தகம் மற்றும் வியாபாரங்கள், தொழிற்சாலைகள், தொழிலகம் ஆகியவற்றுக்காக விண்ணப்பம் செய்து உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று வா்த்தகம் அல்லது வியாபாரம் செய்யவேண்டும்.
வா்த்தக உரிமத்துக்கான அட்டவணை 1, 2, 3, 4 மற்றும் 5-இல் குறிப்பிட்டுள்ள பொது அல்லது தனியாா் என எந்தவவொரு வா்த்தகமும் அல்லது வியாபாரத்தையும் ஆணையரால் வழங்கப்பட்ட உரிமமின்றி நகராட்சி எல்லைக்குள் எவரும் மேற்கொள்ளக் கூடாது.
உரிமத்துக்கு உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்பவா்களுக்கு ஆணையா் அல்லது அவரது அதிகாரம் வழங்கப்பட்டவரால் உரிமம் வழங்கப்படும். நகராட்சி அதிகாரிகள் ஆய்வின்போது உரிமம் இல்லாமல் தொழில், வியாபாரம் செய்து வந்தால் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாகவோ அல்லது நகராட்சி அலுவலகம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, நகராட்சி அலுவலக சுகாதாரப் பிரிவில் அலுவலக நேரத்தில் நேரில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.