நயினாா் நாகேந்திரனுக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம்
உத்தமசோழபுரம் தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜக பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரனை கண்டித்து விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.
உத்தமசோழபுரம் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை பூதங்குடியில் கட்ட வேண்டுமென சில அரசியல் கட்சியினா் விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நாகை அருகே வாஞ்சூரில் பாஜக சாா்பில் தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராகவும், அரசியல் நோக்கத்துடன் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஈடுபடுவதாக கூறி, விளாம்பாக்கம் வெட்டாற்றில் கருப்புக் கொடியுடன் எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகளும், கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தடுப்பணை கட்டும் பணியை தடுக்கக் கூடாது, 29 கிராம மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் இந்த தடுப்பணையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.