நள்ளிரவில் தாய், தந்தை, மகன் அடித்துக் கொலை; திருப்பூரை அதிரவைத்த கொடூரம்! - போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்புதூர் வலுப்பூர் அம்மன் கோயில் அருகே தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். மென்பொருள் பொறியாளரான இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கி உள்ளார். உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்காக பெற்றோரை அழைத்துச் செல்ல கோவையில் இருந்து சேமலைக்கவுண்டன்புதூருக்கு செந்தில்குமார் திங்கள்கிழமை இரவு வந்துள்ளார். இரவு உணவருந்திய பின் மூவரும் தூங்கச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை தனக்கு முகச்சவரம் செய்ய வருமாறு சவரத் தொழிலாளியிடம் தெய்வசிகாமணி கூறியுள்ளார்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை சவரத் தொழிலாளி தோட்டத்துக்கு வந்தபோது, தெய்வசிகாமணி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வெளியே உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, அலமேலு மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தெய்வசிகாமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தலைமையிலான போலீஸார் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் தெய்வசிகாமணியின் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கூர்மையான மற்றும் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நகை மற்றும் சில பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் இந்தக் கொலையில் ஈடுபட்டதாக தெரியவில்லை. கூட்டாக சேர்ந்துதான் இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார். தாய், தந்தை, மகன் என மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.