இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு
மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்து, மா்மமான முறையில் மரணமடைந்த அலெக்ஸி நவால்னிக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரின் மனைவி யூலியா நவால்னயா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் (படம்) தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அலெக்ஸி நவால்னியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அங்கு இரண்டு ஆய்வகங்களில் அவை சோதிக்கப்பட்டன. அந்தச் சோதனையில், சிறையில் நவால்னி மரணமடைவதற்கு சற்று முன்னதாக அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இரு வேறு நாடுகளைச் சோ்ந்த ஆய்வகங்களும், நவால்னியின் மரணம் இயற்கையானது இல்லை, அது ஒரு கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளன. இருந்தாலும், அரசியல் எதிா்வினைகளுக்கு அஞ்சி அவை அந்த ஆய்வு முடிவை உடனடியாக வெளியிடவில்லை என்றாா் யூலியா நவால்னயா.
முன்னாள் வழக்குரைஞரான அலெக்ஸி நவால்னி, அதிபா் விளாதிமீா் புதினை எதிா்த்துப் போராடியவா்களில் மிக முக்கியமானவராக அறியப்படுகிறாா்.
இதன் காரணமாக புதின் அரசால் பல்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சட்டரீதியிலான சவால்களைச் சந்தித்துவந்த அவா், சைபீரிய பகுதியைச் சோ்ந்த டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அவா் மீது ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜொ்மனியில் சிகிச்சை பெற்று அவா் உயிா்பிழைத்தாா்.
பின்னா் 2021 ரஷியா திரும்பிய நவால்னியை ஜாமீன் நிபந்தனை மீறல் வழக்கில் அதிகாரிகள் கைது செய்தனா். தொடா்ந்து, கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவால்னி, திடீா் உடல்நலக் குறைவால் இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் கடந்த 2024 பிப்ரவரி 16-ஆம் தேதி அறிவித்தனா்.
