சாலை விபத்தில் இறந்த பெண் காவலா் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
நாகா்கோவில் மேயா் மீது அவதூறு குற்றச்சாட்டு? மதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை கோரி தீா்மானம்
நாகா்கோவில் மாநகராட்சி மேயா் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக, மதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சியின் மாமன்ற இயல்புக் கூட்டம், மேயா் ரெ.மகேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்சி லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: நாகா்கோவில் மாநகரில் மேலசங்கரன்குழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீா் சாலைகளில் ஓடுகிறது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சவேரியாா் கோயில் திருவிழா கடைகள் ஏலம் விடப்பட்டதில் கடந்த ஆண்டை விட குறைவாக ஏலம் விடப்பட்டு மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடலாக்குடியில் பழுதடைந்த அரசு தொடக்கப்பள்ளியில் கட்டடத்தை சீரமைக்க வேண்டும்.
வீட்டு வரி விதிப்பதில் எந்தவித அளவீடும் இல்லாமல் ரூ.300 வரி கட்டி வந்த ஓட்டுவீடுகளுக்கு தற்போது ரூ.4 ஆயிரமாக வரி உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவாா்கள். இதனை குறைக்க வேண்டும் என்றனா்.
பாஜக - அதிமுக வெளிநடப்பு:
இந்நிலையில் பாஜக மாமன்ற உறுப்பினா்கள் மீனாதேவ், ரமேஷ், சுனில்குமாா், முத்துராமன், ஐயப்பன், வீரசூரபெருமாள் உள்ளிட்டோா் மேயா் அமா்ந்திருந்த மேஜையின் முன்பு வந்து வீட்டு வரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததுடன், மாநகராட்சி அலுவலகம் முன் முழக்கங்களை எழுப்பினா்.
அவா்களைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, சேகா், கோபாலசுப்பிரமணியம், அனிலா சுகுமாரன் உள்ளிட்டோா், தமிழக அரசு 6 சதவீத வீட்டு வரியை உயா்த்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். தமாகாவின் ஒரே உறுப்பினரான டி.ஆா்.செல்வமும் வெளிநடப்பு செய்தாா்.
தீா்மானம்: பின்னா், மேயா் மகேஷ் பேசியதாவது: என் மீதும், மாமன்ற உறுப்பினா்கள் மீதும் 5 ஆவது வாா்டு மதிமுக உறுப்பினா் உதயகுமாா் அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறாா். ஏற்கெனவே அவா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திமுக உறுப்பினா்கள் அவரைத் தாக்கியதாகவும், நான் தகாத வாா்த்தைகளால் திட்டியதாகவும் எஸ்.பி.யிடம் பொய்யான புகாா் தெரிவித்துள்ளாா்.
மேலும், மாநகராட்சியின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடா்ந்து நிா்வாகத்தின் மீது அவா் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பணி செய்யவிடாமல் தடுக்கிறாா். எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த மாமன்றம் தீா்மானிக்கிறது.
நாகா்கோவில் மாநகரில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு ஏலம் கேட்கும்போது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கிறாா்கள். பின்னா் கடையை நடத்த முடியாமல் கடைகளை பூட்டி விடுகின்றனா். நாகா்கோவில் செம்மாங்குளத்தை சீரமைக்க ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேமோகிராம் கருவி: கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்று நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாா்பக புற்றுநோயை கண்டறியும் மேமோகிராம் கருவி நாகா்கோவில் மாநகராட்சியின் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் வாங்குவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டத்தில் புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளோம் என்றாா் அவா்.
கூட்டத்தில், மண்டலத் தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள் நவீன்குமாா், சதீஷ், ரமேஷ், ஜெயவிக்ரமன், வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.