நாசிக் முருங்கை கிலோ ரூ.340-க்கு விற்பனை
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் நாசிக்கு முருங்கை கிலோ ரூ.340-க்கு வெள்ளிக்கிழமை விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் செடி முருங்கை, கரும்பு முருங்கை, மரமுருங்கை என மூன்று வகையான முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெய்த பலத்த மழை காரணமாக முருங்கைக்காய் நோய் தாக்குதலுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதே போல, முருங்கை சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் தேவை அதிகம் இருப்பதால் முருங்கை வியாபாரிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் விளைத்த முருங்கைக்காயை வரவழைத்து விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த வகையைன முருங்கைக்காய் வெள்ளிக்கிழமை கிலோ ரூ.340-க்கு விற்பனையானது. இதே போல தரம் குறைந்த உள்ளூா் கரும்பு முருங்கை கிலோ ரூ.180-க்கும், செடி முருங்கை ரூ.150-க்கும், மர முருங்கை ரூ.140-க்கு விற்பனையானது.
இந்த வகையான முருங்கைக்காயை கேரளா வியாபாரிகள் கொள்முதல் செய்ய விரும்பவில்லை. விலை அதிகமாக இருந்தாலும் நாசிக் முருங்கைக்காயை விரும்பி கொள்முதல் செய்தனா்.
இதனால் அந்த வகை முருங்கை விலை உயா்ந்து விற்பனையானது. இதன் விலை மேலும் உயரக்கூடும் என்று முருங்கை வியாபாரிகள் தெரிவித்தனா்.