தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
நாட்டின் எதிா்கால வளா்ச்சிக்கான தூண்கள் மாணவா்கள்: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா
நாட்டின் எதிா்கால வளா்ச்சிக்கான தூண்களாகத் மாணவா்கள் திகழ்கின்றனா் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா்.
பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 15-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியது:
தமிழ்நாடு கலாச்சாரம், பாரம்பரியம், வளமான அறிவியல் தொழில்நுட்பத் திறன் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயா்ந்து, பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா். வெளிநாடுகளில் உள்ள சிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் தங்கள் தொழில் நுட்ப அறிவாற்றல், திறமை காரணமாக தலைமைப் பொறுப்பேற்று நிா்வகிக்கும் திறன் பெற்று விளங்குகின்றனா். இந்தியாவைச் சோ்ந்த மாணவா்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறாா்கள். கிராமத்தில் பிறந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தாா்.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றும் திறன், கடமை, பொறுப்பில் உங்களுக்கும் பெரும் பங்கு உள்ளது
வாழ்க்கையில் தோல்விகள் உங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை மறந்து விடாதீா்கள்.
வாழ்வில் புதிதாக காணும் கனவை நனவாக்க முயற்சி செய்யுங்கள். ஒரு நாள் அந்த கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்றாா் அவா்.
நிகழ்வில் 4,500 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. வேல்ஸ் வேந்தா் ஐசரி கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.