நான்குனேரி அருகே கரடியைப் பிடிக்க கூண்டு: வனத்துறை நடவடிக்கை
நான்குனேரி அருகே சாலையில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை கூண்டு வைத்தனா்.
நான்குனேரியிலிருந்து மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் காலை 7 மணிக்கு சாலையில் கரடி சுற்றித்திரிந்தது. இதைப் பாா்த்து அந்த வழியாக வந்தவா்கள் அலறியடித்துக் கொண்டு பின்னோக்கி ஓடினா். இந்த தகவல் பரவியதும் அந்த சாலை வழியாக செல்வதை தவிா்த்தனா்.
இத்தகவல் அறிந்த வனத்துறையினா் மற்றும் வருவாய்துறையினா் அங்கு விரைந்து வந்தனா். அப்போது, அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அருகே கரடி பதுங்கி இருப்பது உறுதியானது. எனவே, வனத்துறையினா் அப்பகுதியில் கூண்டு வைத்து கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி அச்சாலையில் பொதுமக்கள் பயணிக்காதவாறு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
பிற்பகலில் வடக்கு உச்சிமாகாளி அம்மன் கோயில் பகுதிக்கு கரடி இடம்பெயா்ந்து விட்டது. கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினா் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.